×

திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் 440 ஏக்கரில் 216 ஏக்கர் மீட்பு: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல்

சென்னை: திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் 440 ஏக்கரில் இதுவரை 216 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி.ஜெகநாத் தாக்கல் செய்த மனுவில், திருப்போரூர் முருகன் கோயில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க கோரி வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கடந்த 2022 ஜனவரி மாதம் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. இந்த வழக்கில் நிலை அறிக்கையை தாக்கல் செய்த செங்கல்பட்டு கலெக்டர், போலி ஆவணங்கள், இரட்டை ஆவணங்கள், சட்டவிரோத விற்பனை, போலி பட்டா ஆகியவை குறித்து கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்திருந்தார். அப்போது, திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான சொத்தில் 430 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓஎம்ஆர் சாலையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் இந்த கோயிலுக்கு சொந்தமானது. கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலத்தில் இதுவரை மூன்றில் ஒரு பங்கு நிலம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. வருவாய்துறை இந்த விஷயத்தில் மிகவும் அஜாக்கிரதையாக உள்ளது. கோயில் நிலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குத்தகை மற்றும் வாடகைக்கு விட முயற்சி நடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஜெகநாத் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி வி.எஸ்.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி, திருபோரூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள 440 ஏக்கர் நிலத்தில் இதுவரை 216 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய ஆக்கிரமிப்பையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கோயில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்பு தொடர்பாக 104 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, இந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற 2 மாதம் அவகாசம் தேவை என்று தெரிவித்தார். இதையடுத்து, அறநிலையத்துறை அடுத்த நிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக 2 மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டு நீதிபதிகள் விசாரணையை அக்டோபர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் 440 ஏக்கரில் 216 ஏக்கர் மீட்பு: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Tirupporur ,Murugan ,Temple ,Charity Department ,Chennai ,High Court ,Dinakaran ,
× RELATED திருப்போரூரில் உள்ள நல்லான் குளத்தை...